Skip to main content

அனுபவம்.... 1.0


DSC_0066

உயர் தரம் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் தான் புத்தகங்களுடனான ஈர்ப்பு அதிகமானது. ஆரம்பத்தில் வைரமுத்துவின், கருவாச்சிக் காவியம், கொஞ்சம் தேநீர் நிறைய வானம், இன்னொரு தேசிய கீதம், அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுதிகள் அதில் அடிக்கடி மீட்டி மீட்டி வாசித்த மின்மினிகளால் ஒரு கடிதம் கஸல் தொகுதி, மு.மேத்தாவின் சில கவிதைத் தொகுதிகள் அதிலும் அதிகத் தடவைகள் மீட்டி வாசித்த, ஒரு வானம் இரு சிறகு மிகவும் பிடித்துப் போன கவிதைத் தொகுதி, என்று புத்தகங்கள், எழுத்துக்களுக்குள்ளாக மூழ்க ஆரம்பித்த நாட்கள்.

அப்துல் ரகுமானின் கஸல் படித்துவிட்டு 80 பக்க வரைதல் கொப்பி ஒன்றை வாங்கி ஒவ்வொரு பக்கமாக படங்கள் வரைந்து ஹைக்கூ கவிதைகள் என்று சொல்லிக் கொண்டு எழுத ஆரம்பித்த நாட்கள்.
இரண்டு கிழமையில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு நண்பர்கள் பார்வைக்கு விட்டு பாராட்டுக்கள் பெற்றுக் கொண்டிருந்த சமயம், கொப்பி காணாமலேயே போய்விட்டது. (எவளோ பொறாமைக்காரி திருடிவிட்டாள்)


இப்படித் தான் எழுத்துக்கும் எனக்குமான நெருக்கம் ஆரம்பித்தது,

எந்த கவிதையாக எடுத்துக் கொண்டாலும் அதிகமாக காதல் தான் பாடு பொருளாக இருந்தது. தபூ சங்கர், வைரமுத்து அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது. தேடிய போது சிக்கியது தான் மனுஷ்ய புத்திரன்.
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் பிடித்துப் போன போது நான் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசையை ஒத்திப் போட்டு விட்டேன். காரணம் கவிதை வெறும் எழுத்தின் அழகியலால் உருவாவதில்லை என்பதை அவருடைய கவிதைகள் ஆழமாகவே உணர்த்தியது. பஹீமா ஜஹானின் கவிதைகள் கூட அவ்வளவு ஆழமானது, இன்று வரை அப்படி ஒரு கவிதை ஒன்று சரி என்னால் எழுதமுடியவில்லை என்ற அவா மனதுக்குள்ளே ஊரிக்கிடக்கிறது.


எழுத்து மீதான தேடல், நல்ல நண்பர்களை உருவாக்கித் தந்தது. அவர்கள் மூலம் நிறை எழுத்தாளர்களின், எழுத்துக்களின் அறிமுகங்கள் கிடைத்தது. ப.சிங்காரம்,சுஜாதா,சாரு நிவேதிதா, எஸ் ரா, தேவதச்சன், மனுஷ்ய புத்திரன், ஷோபா சக்தி, வைக்கம் முகம்மது பஷீர், என்று பட்டியல் பெரியது.

தனிப்பட்ட முறையில் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்,அப்துல் ஹக் லறீனா, பஹீமா ஜஹான், என்று இவர்களுடைய புத்தகங்களை தேடி வாசிப்பேன்.தேடல்கள் தான் நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது. ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டிருந்தால் கோழி கூவுகிறது, சூரியன் உதிக்கிறது, வேலைக்குச் செல்கிறேன், என்று நானும் கவிஞன் தான் என்று கிறுக்க ஆரம்பித்திருப்பேன். ஆனால் நான் நிறுத்திக் கொண்டது எனக்கே மகிழ்ச்சி தான்.
இஸ்லாமியப் புத்தகங்களின் அறிமுகங்கள், தமிழ் மொழி பெயர்ப்புகள் என்று வாசிக்க ஆரம்பித்து கொஞ்ச நாட்கள் தான். அதுவும் நண்பன் ஒருவனின் அறிமுகம் மூலம் தான்.
ஆசையாக வாசிக்க எடுத்த நூல் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் (ஷஹீத் செய்யித் குதுப்_ன் பீ லிலாலில் குர்ஆன்) தமிழ் மொழி பெயர்ப்புப் படித்து விட்டு எதுவுமே புரியவில்லையே என்று ஆதங்கப்பட்டு வைத்ததோடு சரி இன்று வரை தொடவே இல்லை.

தேடல் தொடரும்.

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.