Skip to main content

Posts

Showing posts from April, 2013

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல!
எனது தோற்றமுனை வருத்துகின்றதா? வாட்டமுற்று நீ வருந்துவதேன்? என் வீட்டின் முன்னறை அருகிருந்து முடுக்கிவிடத் தோதான - பல எண்ணெய்க் கிணறுகளை அடையப்பெற்றதுபோல் - நான் நடப்பதைக் கண்டுதானோ?
நிலவினைப் போல் பகலவன் போல் - கடலதன் மேலெழும் அலைகளைப் போல் கிளர்ந்தே உயர்ந்தெழும் நம்பிக்கைகளைப் போல் மேலும் நான் எழுவேனே!
தாழ்த்திய விழியுடன் தலை கவிழ்ந்திருக்க, அழுதழுது அரற்றியே தொய்வுற்ற ஆன்மா, கண்ணீர்த் துளியென துவள்கிற தோளுடன் நொறுங்கிய நிலையில் - எனைக் காணவோ விழைகிறாய்?

நடுநிலை தவறாதீர்கள்..

எப்போதுமே ஒரு பிழை, இன்னொரு பிழையை நியாயப்படுத்தி விடுவதில்லை. இதனை நமது சகோதரர்கள் சிலர் நினைத்துப் பார்க்க மறந்து விடுகின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்த கதையாடல்கள் மேலெழும் சந்தர்ப்பத்தில் எல்லாம், சில சகோதரர்கள் காத்தான்குடிப் படுகொலைப் படங்களையும் இன்னும் சிலர் இந்திய இராணுவத்தைவிட இலங்கை இராணுவம் எவ்வளவு பெருந்தன்மையானது என்று ஒப்பீடு செய்யும் ஒரு படத்தையும் பகிர்ந்துகொள்கின்றார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது மிகுந்த ஆயாசமாக இருக்கிறது.
ஏன் இவர்கள் இப்படிப் பக்கசார்பாகவும், மனிதநேயமின்றியும் சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இது தொடர்பாகச் சிந்திக்கும்போது, இவர்கள் அரசுக்கு வால் பிடிக்கிறார்களா, அல்லது பிரச்சினையை வேறு திசை நோக்கித் திருப்ப முனைகின்றனரா, அல்லது தமது அபிமானத்துக்குரிய ஆலிம்கள் கடந்த ஜெனீவா பேரவையில் செய்த நீதியற்ற செயலுக்கு வக்காலத்து வாங்க முற்படுகின்றனரா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாய்க் கூறிக்கொண்ட ஓர் ஆயுதக்குழு காத்தான்குடியில் படுகொலைகளை மேற்கொண்டதையும், 1990 இல் வடபு…

நீ..... தீ......

நியாயங்களின் விலை இங்கே அதிகமாகி விட்டது! எனவேதான் ஏழைகளால்  அதை வாங்க இயலவில்லை.
சட்டம் என்பது வசதி படைத்தவர்களுக்கு வகுத்துக் கொடுத்த சௌகரியமாகிவிட்டது!
இங்கே நீதி செத்துக் கிடக்கிறது.. குற்றுயிரும் குலை உயிருமாகி நீதி மன்றத்தின் நிழலிலேயே நீதி செத்துக் கிடக்கிறது!
வழக்கறிஞர்களுக்குள் கடுமையான வாதம் இறந்து போய்விட்ட நீதியின் பிணத்தை எரிப்பதா.. புதைப்பதா?? என்று!
இருதரப்பு வழக்கறிஞர்களும் வீராவேசமாக  விவாதிக்கிறார்கள்-
நம்மிடமே கட்டணம் வாங்கிக் கொண்டு!
மு.மேத்தா

மௌனப் புரட்சிகளின் மையம்

சினிமா!

விஞ்ஞான தேவதை
கையில் ஏந்தி நிற்கும்
கலாதீபம்!

இந்த தீபத்தை
விட்டில்களல்ல
நட்சத்திரங்களே மொய்க்கும்

இந்த தீபம்
சில சூரியன்களை ஈனும்
சுயபலம் வாய்ந்தது

நேற்றுப் பதிதாய்ச்
சிலேட்டுப் பிடித்த
சிறுவன் மாதிரி
நம் வாழ்க்கையின்
பல பிரதேசங்களை
இது
கிறுக்கி வைத்திருக்கிறது.

நம்மூர்த் தாமரைகள்
இன்று
சூரியனைப் பார்த்தல்ல
திரைப்பாட்டின்
மெட்டுக்கள் கேட்டே
மொட்டுகள் விரிக்கும்

பட்டணத்துக் குழந்தைகள்
தாயின் தாலாட்டுக் கேட்டால்
ஒப்பாரி வைக்கும்!
விவித்பாரதி
காதில் விழுந்தால்தான்
கண் வளரும்!

சினிமாச் சுவரொட்டிகள்
கல்லறையின் மீது தவிர
ஒவ்வொரு சுவரிலும்
ஒட்டப்பட்டு விட்டன!

இங்கு ஓட்டுப் பெட்டிகளையும்
சவப்பெட்டிகளையும் கூட
படப்பெட்டிகளே தீர்மானிக்கும்!

தேனின் சத்தும்
விஷத்தின் வீரியமும்
சேர்ந்த கலவையே சினிமா!

இது மௌனப் புரட்சிகளின் மையம்

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

தாழிடப்பட்ட கதவுகள்

தாழிடப்பட்ட கதவுகள்
ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு மர்மம்
ஏதோ ஓர் எதிர்ப்புணர்வின் உருக்கொண்டு
எம் முகத்தினில் அறைகின்றன...


மூடித் தாழிட்ட கதவுகள்
சிறையினது கொடூரத்தை...
விரட்டப்பட்ட - ஓர்
அகதியின் துயரத்தை...
இறந்துபோனவனி/ளின் வெற்றிடத்தை...
அடையாளமிழந்த சமூகமொன்றின்
வரலாற்றுத் தோல்வியினை
இப்படியான எதையெல்லாமோ
காற்றிடம் சொல்லியழுது
முறையிடக் கூடும்!


இறுக மூடிய கதவுகள்
இறுக மூடிய இதயங்கள்
இவையிரண்டில்...
வன்முறை உச்சங்கொள்வது
இரண்டாவதில்தான்!


-- லறீனா அப்துல் ஹக்--