Skip to main content

சூடுள்ளிக் கூடத்தில் மணியொலி ‘கணீர் கணீ’ ரெனக் கேட்க, மாணவர்கள் கோரஸாக ஸலவாத் ஓதிவிட்டு, வெண்புறாக் கூட்டமாய் பிரதான வாயிலினூடாக வெளியேரிக் கொண்டிருந்தார்கள். யாரையும் இடிக்காமல், நிதானமாய் வந்து கொண்டிருந்த றிழ்வானின் முகத்தில் இனம் புரியாத பரபரப்பு குடி கொண்டிருந்தது.

ஆண்டு ஆறில் கல்வி கற்கும் கெட்டிக்கார மாணவன் றிழ்வான், கணவனால் கைவிடப்பட்ட கதீஜாவின் ஒரே மகன். வீடுகளில் சமயல் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருவாயில் தன் மகனைப் படிக்க அனுப்புகிறாள். தான் எடுக்கும் கூலிக்கு, வஞ்சனையின்றி உழைப்பவள் என்று ஊரில் அவளுக்கு எப்போதும் நல்லபெயர்.

தன் தாயைப் பற்றி சிந்தனையில் நடந்த றிழ்வான், அந்தப் புதுக் குடியிருப்புப் பகுதியை அடைந்ததும், நடையைத் துரிதமாக்கிப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டை அண்மித்தான். அவனைக் கண்ட மேஸ்திரி கரீம் நாநா, “அடடே! கதீஜாட மவனா? வா வா இன்னைக்கும் சரியான நேரத்துக்கு வந்துட்டே, ஏதும் சாப்பிட்டியா?” எனக் கரினையோடு விசாரித்தார்.

‘இல்லை’ என்பதாக தலையை இருபுறமும் ஆட்டிய றிழ்வானிடம் “ இந்தா இந்தப் ‘பார்சல்’ல கொஞ்சம் சோறு இரிக்கி. நீ சீக்கிரமா சாப்பிட்டுட்டு, முடிஞ்சலவு செங்கல்ல ரோட்டுல இருந்து தூக்கிட்டு வா வெள்ள சேட்ட கழட்டி, அந்தக் கொடியில போடு” அடுக்கடுக்காய் கட்டளைகளைப் பிறப்பித்தபடி, ‘சிமென்ட்’ கலக்கும் பகுதியை பார்வையிடப் போனார் கரீம் நாநா.

கையிலே ஜம்பது ருபாவுடன் நடந்த றிழ்வானின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. மூன்று தினங்கள் தன் பிஞ்சுத் தோள்களால் செங்கல் சுமந்ததால், காய்த்துப் போன தோள்கல் வலித்தாலும், இம்முறை ஸ்கூல்ஃபீஸ் கட்ட உம்மாவை தொந்தரவு செய்ய வேண்டியிராது என்ற பெருமித எண்ணம் அவனது தோள்வலியை மறக்கச் செய்தது. உற்சாகத்தோடு, உம்மா வேலை செய்யும் காதர் ஹாஜியார் வீட்டையடைந்தான்.

தூரத்திலேயே அவன் வருவதை கண்டு கொண்ட ஹாஜியாரின் பேரப்பிள்ளைகள் சலீமும் சல்மாவும் ஓடி வந்தார்கள். “றிழ்வான், நாங்க புதுசா வாங்கிய கார் எவ்வளவு அழகு தெரியுமா? வா காட்டுறோம்” என்று கூறி றிழ்வானின் கையைப் பற்றி இழுத்தவாறு ஓடினான் சலீம்.

சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, அங்கே வந்த ஹாஜியாரின் மகள், “ மேசை லாச்சியில் வெச்சிருந்த ஜம்பது ருபாய்த்தாளக் காணல்ல. றிழ்வான் நீயும் அங்க தானே விளையாடிட்டு இருந்த, எடுத்தியா? எடுத்திருந்தா தந்திரு” என்று அதட்டினாள். றிழ்வான் மிரள மிரள விழிக்கவும், அவனின் தாய் கதீஜா முந்தானைத் தலைப்பில் கைகளைத் துடைத்தவாறு அங்கே வரவும் சரியாயிருந்தது.

“மகள், ஏண்ட மகன் ஒரு காலமும் அப்படி அடுத்தவங்கட பொருள எடுக்கிறவன் இல்லம்மா”

“ஓஹோ! அப்படின்னா, மேசைலாச்சியில இருந்த ஜம்பது ருபா பறந்து போயிருச்சா? இவன் முழிக்கிற முழியே சரியில்லையே! டேய், கிட்ட வா. ஓன்ட களிசான் பொக்கற்ற பாக்கணும்.” அவள் அவனையிழுத்துச் சோதனையிட, கையில் ஜம்பது ருபாய் அகப்பட்டது. ஏளனத்தோடு அவள் கதீஜாவை ஏறிட்டு, “பெரீசா அளந்தீங்களே, ஒங்கட புள்ளய பத்தி. செய்யிறதையும் செஞ்சிட்டு, ஊமைக்கோட்டானாய் நிகிகிறதப் பாரு. திருட்டு ராஸ்கள்” என்று கத்தினாள்.

அவமானத்தால் குன்றிப்போன கதீஜா, தரதரவென்று மகனை இழுத்துக்கொண்டு தன் குடிசையை அடைந்தாள். தள்ளிவிட்ட வேகத்தில் முற்றத்தில் போய் விழுந்தான் றிழ்வான். வேகமாக பக்கத்து விட்டுக்குள் நுழைந்து, எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு வந்த கதீஜா, ஊமைன்னு கூட பார்க்காம, “கண்ணுக்குள்ள வெச்சி வளத்து, தகப்பனுமில்லாம நாயா அலைஞ்சு ஒன்னப் படிக்க படிக்க வெச்சதுக்கா இப்பிடி என் மானத்த வாங்கினே? இன்றைக்கி நான் போடுற சூடு, இனி ஆயுசுக்கும் அடுத்தவங்க சொத்த தொடாம பாத்துக்கும்.” என ஆவேசமாகக் கத்தியபடி, அவனது உள்ளங்கையில் சூடு போட்டாள்.

வாய்விட்டு அலறமுடியாமல், அரற்றியபடி, கண்ணீர் வழிந்தோட நிலத்தில் புரண்டு துடி துடித்தான் ஊமைச் சிறுவன் றிழ்வான். அப்போது… அங்கே ஓடோடி வந்த கரீம் நாநா, “புள்ள கதீஜா, அந்த ஜம்பது ருபாவ ஹாஜியார்ட மவன் எடுத்தாராம், இந்தா, இத ஓங்கிட்ட கொடுக்கச் சொன்னாரு” என ஜம்பது ருபாயத்தாளை நீட்டவே, “ இது எங்கால இவனுக்கு?” என வியப்போடு கேட்ட கதீஜாவிடம், “ஒனக்கு விசயமே தெரியாதா? ஸ்கூல் பீஸ் கட்ட காசு கேட்டு, ஒன்ன ஒனக்கு கஷ்டம் தரப்படாதுன்னு, புதுக்குடியிருப்புக்கு மூணு நாளா ஸ்கூல் விட்டு வந்து, செங்கல் தூக்கினான்னு, நான் தான் இன்னைக்கு ஜம்பது ருபா கொடுத்தேன். சேச்சே! என்ன புள்ள இப்படி சூடு போட்டுடே! படிக்கிற பொடியன் பாவம், சீக்கிரமா மருந்துபோடு” எனப் பதிலளித்து விட்டுச் சென்றார்.

மகனை கட்டிக்கொண்டு கதறியழுதாள் அந்தத் தாய். தலையில் அடித்துக் கொண்டு அழுத கதீஜாவின் கண்களிலிருந்து, கண்ணீர் ஆறாயப் பெருகியது. ஜம்பது சதத்தின் அளவு பொசுங்கிப் போன தனது வலது உள்ளங்கையை அழுத்திக் கொண்டிருந்த இடது கரத்தை நீட்டித், தன் தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டான் அந்தப் பாசமிக்க ஊமை மகன். விம்மலோடு அவனை இழுத்து அணைத்தாள் கதீஜா. இருவரது தோள்களும் கண்ணீரால் நனைய, குடிசை மூலையில் அந்த ஜம்பது ருபாய்த்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

லறீனா ஹக்
(எருமை மாடும் துளசிச் செடியும்)

Comments

Post a Comment

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.