Skip to main content

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்
வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.


வாழ்வில் வெற்றிபெறவும் சாதனை புரியவும் அனைவரும் கனவு காண்பர். சிகரம் தொடுபவர் சிலரே. உனது வாழ்வை வடிவமைக்க வேண்டிய கடப்பாடு உன்னைச்சாரும். அதை வளப்படுத்த வேண்டும். வென்றெடுக்க வேண்டும். மெழுகாய் உருகி அழிந்து போவதால் உன் வாழ்வில் விளக்கேறாது. இருள் மட்டுமே படரும். சந்தனமாய் எறிந்து கருகினாலும் வாசம் மறைந்த பின் சாம்பல் தான் எஞ்சும்.

உன் ஆழ்மனதோடு சற்று உரையாடிப்பார். எத்தனை சோகப்பொட்டலங்களை உன்னை அறியாமலே சுமந்திருக்கிறாய் என்பதை அறிவாய். உன் மனச்சாட்சியோடு பேசிப்பார். உன்னையே நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய் என்பதை நீ உணர்வாய். ஏகாந்தப் பொழுதொன்றில் தனிமையில் அமர்ந்து கடந்து வந்த பாதையை மீட்டிப்பார். நீ பயன்படுத்தாமலே இழந்து போனவையும் அழிந்து போனவையும் தான் அதிகம் என்பதை புரிவாய்.

இனியாவது உனக்காக வாழ். உண்மையாக வாழ். உன்னோடு வாழ். உன் எண்ணங்களை வண்ணமயமாக்கு. எதிர் மறை உணர்வும் சிந்தனையும் ஆட்கொல்லி வைரஸ் போல உன்னுள்ளே வாழும் ஒட்டுண்ணியாய் உன் வாழ்வை உறிஞ்சிக்குடிக்கும். உன்னை மௌனப்படுகொலை செய்யும். நீ அறியவே மாட்டாய். நீ இறந்து போயிருப்பாய். வாழ்வது போன்ற உணர்வுகள் அதிகமாய் இருக்கும். ஆனால், இறந்து போனவர்களுக்கு நீயும் சமனாகவே இருப்பாய். இலக்கின்றி அசைவாய். இதயம் துடிப்பதாய் உணர்வாய். உன் உணர்வுகள் செத்துப்போயிருக்கும். நீ உனக்காக வாழாத வரை உன் வாழ்வின் நியதி இது தான். இனியாவது உன் வாழ்வை உனக்காக வாழ்ந்து பார்.

உன் சுயத்தை அறிந்து வாழ். உன் இயல்பைத் தெரிந்து வாழ். உன் உணர்வுகளை மதித்து வாழ். உன் திறமைகளை நீயே ஒரு முறை புகழ்ந்து பார். கண்ணாடி முன் நின்று உன்னை நீயே ரசித்துப்பார். உன் அடைவுகளை கணித்துப்பார். நீ எத்துனை வளம் மிக்கவன் என்று புரிவாய். நீ உலகிற்காய் பிறந்தவனல்ல. உலகமே உனக்காய் படைக்கப்பட்டது என்று உணர்வாய். நீ தான் நாயகன். நீ வாழும் வரை போராடு. உனக்காக வாழ்வதை உணர்வாய். உன்னையும் நீயே மதித்துப்பார். ஏன் வந்தோம்? என்ன செய்கிறோம்? எங்கு செல்லப்போகிறோம் என்ற வினாக்களுக்கு விடை தேடிப்பார். நீ இன்னும் வாழவில்லை என்பாய். உண்மையான வாழ்வை அடையவில்லை என்பாய். 
தினம் கண்மூடித் திறந்து காலங்கடத்துவது வாழ்வில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என அதனை பாழ்படுத்துவதும் உகந்ததல்ல. இனியாவது உன் சுயத்தை வலிமையாக்கு. உன் சிந்தனையை தூய்மையான கருத்துக்களால் நிரப்பு. உன் மூலையை மீள் சலவை செய். உன் கடிவாளத்தை நீயே எடு. மூலைக்கும் இதயத்திற்குமான போரை உக்கிரமாக்கு. உன் மனோ இச்சைக்கு எஜமானாகு. மூலைக்கு அடிமையாகு. மனதை அழகாக்கு. உள் மனசை உற்ற தோழனாக்க இனியாவது முயற்சி செய். அதிலே வெற்றி பெறப்பார்.

எதிர்மறை எண்ணங்களை கைவிடு. கசப்பான நிகழ்வுகளை கடற்கரை மண்ணில் எழுதிவை, தானாக மறையும். இன்பப் பரவசமூட்டும் நிகழ்வுகளை மனக்கண் முன் வரவழை. சோர்வும் தளர்வும் உன்னில் குடிகொள்ளும் போது மீட்டிப்பார். துன்பமும் விரக்தியும் கூடாரமிட இடம் தராதே. இயலாமையை உள்ளே நுழைய அனுமதிக்காதே. இன்பங்களை பகிர்ந்து கொள். துன்பங்களைக் குழிதோண்டிப் புதைத்து விடு.

உன்னை உன் பழக்க வழக்கங்களை மாற்றிப்பார். சூழலை மாற்று. மகிழ்வாக இரு. மனந் திறந்து பேசு. அசிங்கம் சேரும் குப்பைத் தொட்டியாய் உள்ளத்தை மாற்றாதே. உன் வாழ்வே துர்நாற்றமடைந்துவிடும். எதிர்வரும் பொழுதுகளிலாவது உன்னை நேசி. உன் மென்னுரைகளை மதி. உன் பெறுமதியை உணர்ந்து கொள். இனியாவது வாழுங் கலையைக் கற்றுக் கொள். உண்மையாக வாழ்பவர்களால் நிறையவே சாதிக்கலாம்.

பிஸ்தாமி – வைகறை இதழில் வெளிவந்தது.

Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…